13வது திருத்தத்திற்கு மேல் செல்லத் தயார்;முன்னாள் புலிகளின் ஆதரவையும் ஏற்பேன்: பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா பேட்டி

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லமுடியும் எனவும், முன்னாள் புலி உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதனை இன்முகத்துடன் வரவேற்பேன் என்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி றைமையினை இல்லாதொழித்து பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறக்கூடிய ஜனநாயக ஆட்சியை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசப்படுகின்றது. இது 20 வருடங்களுக்கு ன்னர் பேசப்பட்ட விடயமாகும்.

அன்றிருந்த நிலைமையும் தற்போதுள்ள நிலைமைகளும் வேறு, கொள்கையின் பிரகாரம் சகல பிரஜைகளின் அரசியல் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படல்வேண்டும் என்பதுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லமுடியும் என நான் நினைக்கின்றேன் என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா தெவித்தார்.

தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக எந்த ஒரு நபரும் எனக்கு ஆதரவளிப்பாராயின் அவர் எனது கொள்கைக்காக செயற்படுகின்றார் என்பதாகும். எனது கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

புலிகளுடன் இருந்தவர்களும் சரி பிரபாகரனின் பெற்றோர்கள் ஆயினும் சரி இந்த பிரசாரத்திற்கு ஆதரவளிப்பார்களாயின் அதனை ஏற்றுக்கொள்வேன். எனது கொள்கையை ஏற்று முன்னாள் புலி உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதனை இன்முகத்துடன் வரவேற்பேன் என்றும் அவர் சொன்னார்.

கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளும் பதில்களும் பின்வருமாறு;

கே; தேர்தலில் வெளிநாடுகளின் கண்காணிப்பாளர்கள் வருவதனை விரும்புகின்றார்களா?

ப; வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வருவதனை வரவேற்கின்றேன். கட்டாயம் அவர்கள் வரவேண்டும். எவ்வாறான அழுத்தங்களுக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இடமளிக்கக்கூடாது. இதற்கு முன்னர் பயங்கரவாத அழுத்தம் உள்ளிட்ட விடயங்களிலிருந்து நாட்டை காப்பாற்றவேண்டும் என நான் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரிடம் கேட்டிருந்தேன்.

கே; நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழிப்பீர்களா?

ப; ஆக குறைந்தது ஆறுமாத காலத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும். பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை கட்டாயமாக அதனை நோக்கியே எமது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கே; கடந்த காலங்களில் யுத்தம் முன்னெடுக்கப்பட்ட வேளையில் பல்வேறு அழுத்தங்கள் வந்தன இம்முறையும் அழுத்தங்கள் வந்தன. இறுதிக்கட்ட வேளையில் ஜனாதிபதி யுத்தத்தை நிறுத்துமாறு கோயிருந்தால் நீங்கள் எவ்வாறான முடிவை எட்டியிருப்பீர்கள்?

ப:அழுத்தங்கள் வந்த சந்தர்ப்பங்களை பார்த்தால் அதன் போது வெளிநாடுகளின் அரசியலிலும் எமது நாட்டு அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன நாம் சரியான முறைமையில் செல்கின்றோம் என்பதை உலகம் புரிந்துகொண்டது.

நாட்டுடன் வைராக்கியத்தை வைத்துக்கொண்டு முன்செல்ல முடியாது. வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில் எமக்கு திரும்ப முடியாத ஓர் இடமிருந்தது. எனினும் மக்களை ஐக்கியப்படுத்திக்கொண்டு முன்சென்றோம். சரியாக செல்கின்றோம் என்பது தான் முக்கியமானதாகும், அந்தப் பயணத்தை தடுக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை. அதனால் தான் நல்ல விடயங்களுக்கு அனைவரும் ஒன்றிணையவேண்டும்.

கே; முகாம்களில் ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள் என்று கூறியிருந்தீர்கள். இந்நிலையில் அம்மக்கள் துன்பப்படுவதாக நீங்களே கூறுகின்றீர்களே?

ப; அச்சுறுத்தல் இருக்குமென்று அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், லொறிகளில் ஆயிரக்கணகக்கானோரை ஏற்றிக்கொண்டு காடுகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத இடங்களில் கிராமங்களில் எவ்விதமான உட்கட்டமைப்பு வசதிகளும் செய்துகொடுக்காத இடங்களில் மக்களை குடியமர்த்த வேண்டிய அவசியமில்லை.

ஒரே நாளில் மக்களை குடியமர்த்தவேண்டும் என்று நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. தேவையான பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு கண்ணிவெடிகளை அகற்றி உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொடுத்தே மக்கள் குடியமர்த்தப்பட வேண்டும். அரசியல் இலாபத்தை தேடிக்கொள்ளாமல் மக்களின் தேவை, பாதுகாப்பை உணர்ந்து செயற்படவேண்டும்.

பயங்கரவாதிகள் இருப்பார்களாயின் அவர்களை கைது செய்து சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கக்கூடாது. தொழிலில் இருந்தபோது நான் இதனையே வலியுறுத்தினேன். தற்போதும் வலியுறுத்துகின்றேன். இவ்விடயத்தில் என் இதயத்தில் அழுக்கில்லை.

கே; கடந்த 30 வருடங்களாக யுத்தத்தை நிறைவு செய்யமுடியாமைக்கு இராணுவ ரீதியிலான பிரச்சினையா? அரசியல் பிரச்சினையா காரணமாகவிருந்தது?

ப; எமது பிழையை மற்றொரு தரப்பின் மீது சுமத்துவதற்கு விரும்பவில்லை. எம்மில் பிரச்சினைகள் இருந்தன. பெரும் தவறுகளை இழைத்துள்ளோம்.

உதாரணமாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதற்கு திட்டமிட்டு கிழக்கை இழந்தோம், முல்லைத்தீவை கைப்பற்றுவதற்காக யாழ்ப்பாணத்தை இழந்தோம்.

கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக ஆனையிறவையும் மாங்குளத்தையும் இழந்தோம். இவ்வாறு பல்வேறு இழப்புகள் ஏற்பட்டன.

எனினும் யுத்தத்தை நிறைவு செய்யவேண்டும் என்பதில் அரச தலைவர்கள் சகலரும் கூடிய கவனம் செலுத்தினர். சில தருணங்களில் தவறான வழிநடத்தலினால் பல பின்னடைவுகளை சந்தித்தோம். அதனை நாம் ஏற்றுக்கொண்டோம். இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான என்னை பொறுத்தமட்டில் இராணுவத்தின் பின்னடைவும் இதற்கு காரணமாகவிருந்தது.

கே; மக்களின் பாதுகாப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?

ப; இந்த கேள்விகளுக்கு அனுபவமிக்க அரசியல்வாதியினால் கூட முறையாக பதிலளிக்க முடியாது. இராணுவத்தில் 40 வருடங்கள் சேவையாற்றியவர் என்பதனால் என்னை சுற்றியிருப்பவர்களும் ஆதரவளிப்பவர்களுக்கும் வழங்கும் ஆலோசனைகளின் பிரகாரம் இதற்கான திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்தலாம்.

ஆட்சி செய்த இரண்டு கட்சிகளை பொறுத்தமட்டில் ஐக்கிய தேசியக்கட்சியினால் பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்ப முடியும். அதில் நல்ல அனுபவம் கொண்டவர்கள் அங்கிருக்கின்றனர். அவர்களுடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடியும் என்று நம்புகின்றேன்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழித்து பாராளுமன்றத்திற்கு பதிலளிக்கக்கூடிய ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவேன். அவை தொடர்பிலேயே தற்போதைக்கு பேசப்பட்டன. அந்த பாதையிலேயே செல்வேன்.

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசப்படுகின்றது. இது 20 வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்ட விடயங்களாகும் அன்றிருந்த நிலைமைகளும் தற்போதுள்ள நிலைமைகளும் வேறு, கொள்கையின் பிரகாரம் சகல பிரஜைகளின் அரசியல் பாதுகாப்பு, உயிர், பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படல்வேண்டும் என்பதுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்லமுடியும் என நான் நினைக்கின்றேன்.

கே; கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கின்றனவே?

ப; ஆம் ,ஆனால் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்னும் பொறுப்பை ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது இங்கு வெறுமனே வெறுமைப்படுத்தப்பட்ட பதவியாகும். அந்த பதவிக்காகவும் எனக்காகவும் நாடு பெருந்தொகையான நிதியை செலவிடுகின்றது ஆனால் என்னால் எதுவுமே செய்யமுடியாது.

எவ்விதமான அதிகாரம் இன்றி வேலைகளையும் செய்யாமல் பெருந்தொகையான நிதியை செலவிடுவதற்கு விரும்பவில்லை, நிர்வாகம் தேவை, வேலைசெய்யவேண்டும்.

கே;அன்று சிறுபான்மை இனங்களை பற்றி தவறாக கருத்து தெரிவித்திருந்தீர்களே?

ப; நான் கூறியதை ஊடகவியலாளர் பிழையாக விளங்கிக்கொண்டுவிட்டார். இந்த நாட்டை சிங்களவர்கள் ஆட்சிசெய்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. நான் வரலாற்று ஆய்வாளர் அல்ல. சிறுபான்மை இனத்தையும் இணைத்துக்கொண்டு செல்லவேண்டும் என்று கூறியிருந்தேன். அத்துடன் அரசியலமைப்பில் இது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

சிங்கள பௌத்தனாகிய நான் சகல மதங்கள், மொழிகள் இனங்களின் கலாசாரத்தை மதிக்கின்றேன் என்பதனால் எவலும் வேறுபாடு இருக்காது.

கே; பாதுகாப்பு குறைக்கப்பட்டது தொடர்பில் என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

ப; பாதுகாப்பு தொடர்பில் நான் திருப்தி கொள்ளவில்லை. என்மீதே முதலாவது தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு அச்சுறுத்தலுக்கு இலக்கான எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. நான் வீதியில் செல்லும் போது தாக்குதல் நடத்தப்பட்டால் நூற்றுக்கணக்கான பொதுமக்களே பலியாகவேண்டிய நிலைமை ஏற்படும். பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம்.

கே; ஆயுத கொள்வனவில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனவே?

ப; படைகளுக்காக பல்குழல் பீரங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இதற்கான நிதி விவகாரங்களை பாதுகாப்பு அமைச்சும் அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமே மேற்கொண்டனர். இராணுவத்தளபதியான நான் தொழில்நுட்ப மதிப்பீட்டை மட்டுமே செய்தேன்.

கே; ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற உங்களால் பெருந்தொகையான நிதியை செலவிடவேண்டிவரும். எனினும் அவ்வாறான பெருந்தொகையை புலிகளுக்கு ஆதரவளித்த சர்வதேச நிறுவனமொன்று ஆதரவளிப்பதற்கு முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனவே?

ப; தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக எந்த ஒரு நபரும் எனக்கு ஆதரவளிப்பாராயின் அவர்கள் எனது கொள்கைக்காக செயற்படுகின்றனர் என்பதாகும். எனது கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது. புலிகளுடன் இருந்தவர்களாக இருந்தாலென்ன பிரபாகரனின் பெற்றோர்களானால் என்ன இந்த பிரசாரத்திற்கு ஆதரவளிப்பார்களாயின் அதனை ஏற்றுக்கொள்வேன்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கென பெருந்தொகையான நிதி தேவைப்படும். எனது ஓய்வூதிய கொடுப்பனவான 50 ஆயிரம் ரூபாவில் அதனை செய்யமுடியாது. காரியாலயங்கள் அமைத்து கூட்டங்களை நடத்தவேண்டும். இளைஞர் யுவதிகள் எனக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் எனது கொள்கையை ஏற்று முன்னாள் புலி உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதனை இன்முகத்துடன் வரவேற்பேன்.

கே; யாழ்ப்பாணத்திலும் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்களா?

ப; என்னால் முடிந்த மட்டில் நான் செய்வேன். அதற்காக “புரம்டர்’ பயன்படுத்தமாட்டேன் பாதுகாப்பு போதாது, பாதுகாப்பு இருந்தால் எங்குவேண்டுமானாலும் சென்று பிரசாரங்களை முன்னெடுப்பேன்.

கே; இந்தியாவுடனான உறவு எவ்வாறு இருக்கின்றது?

ப; நான் இரண்டாவது படைநிலை அதிகாரியாக பதவிவகித்த போது இந்தியாவிற்கு நான்கு தடவைகள் சென்றிருக்கின்றேன். நூறு வீதமல்ல ஆயிரம் வீதம் நல்ல உறவு இருக்கின்றது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் யுத்தத்தின்போது ஆயுதாரிகளை வழங்கியிருந்தன. ஆனால், மானசீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அயல்நாடான இந்தியா உதவி புரிந்தது.

கே; அரசாங்கத்தில் ஊழல் நிறைந்தது என்கின்றீர்கள். அப்படியாயின் அதனை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா?

ப; நிச்சயமாக அதனை ஒழிப்பதற்காக நான் நடவடிக்கை எடுப்பேன்.

கே; அரசாங்கத்தின் மீது யுத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால்?

ப; யுத்தத்தை முன்னெடுத்ததில் நானுமொரு பங்காளி என்பதனால் சரியான தகவல்களை கோருவோம் அவ்வாறு நடந்திருக்குமாயின் அதனை மூடி மறைப்பதற்கு இடமளிக்கமாட்டேன் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் .

கே. ஜே.வி.பி., ஐ.தே.க. சந்திப்பில் எதனை கதைத்தீர்கள்?

ப; எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது தொடர்பிலும் கலந்துரையாடினோம்.

கே; எந்த கட்சியினர் உங்களை முதலில் சந்தித்தனர்?

ப; யார்? முதலில் சந்தித்தனர் என்பது பிரச்சினையில்லை. அவர்களுக்குள் கலந்துரையாடியதன் பின்னர் ஜே.வி.பி., ஐ.தே.க., ஐக்கிய தேசிய முன்னணியுடன் சந்திப்பு நடத்தப்பட்டது.

கே; ஜனாதிபதியிடம் நீங்கள் கோரியதற்கு இணங்க பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் தெரிவித்திருக்கின்றாரே?

ப; ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எனது பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடினேன் அப்போது இருவருக்கும் இடையில் சில விடயங்கள் பேசப்பட்டன. அதனை எழுத்துமூலம் தெரியப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் கேட்டிருந்தார். அதன் பிரகாரம் சமர்ப்பித்திருந்தேன். அந்தக் கடிதத்தையே இராணுவ ஊடகப்பேச்சாளர் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஓடுகின்றார்.

அந்த நேரத்தில் வேறு படையினரின் தளபதிகளை கூட என்னை சந்திப்பதற்கு விரும்பவில்லை, எனக்கு கீழிருந்த என்னால் தரயர்த்தப்பட்டவர்களுக்கு கூட பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கே; உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தை எப்போது கையளிப்பீர்கள்?

ப; வாடகைக்கு வீடொன்றை தேடிக்கொண்டிருக்கின்றேன். ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அவ்வீட்டு உரிமையாளரை பாதாள உலககோஷ்டியினர் மிரட்டுகின்றனர். எனது அரசியல் காரியாலயத்திற்கு அண்மித்தே வீட்டினை எடுக்கவேண்டும் அதற்கு ஏற்றவகையில் வாடகைவீடொன்று கிடைத்தவுடன் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறுவேன்.

கே; நாட்டில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

ப; லசந்த விக்ரமதுங்க மட்டுமல்லாது கொழும்பில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் எனக்கெதிராக எதிர்காலத்தில் விரல் நீட்டப்படும். இராணுவத்தினர் சீருடையில் இருக்கும் போது ஒழுக்கமாகவே வழிநடத்தப்பட்டனர்.

கே; மதுவுக்கு முற்றுப்புள்ளி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பீர்களா?

ப; மதுபாவனையின் மூலம் ஏற்படும் சௌகரியத்திற்கும் இடமளிக்கவேண்டும், மதுவை அளவாக அருந்தினால் அது சுதந்திரமான கலந்துரையாடலுக்கு வழிசமைக்கும். எனினும் போதைப்பொருள் பாவனையை அழிக்கவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் தடைசெய்வேன் என்று கூறுவேனாயின் எனக்கு வாக்குகள் கிடைக்காது.

கே; சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கை என்ன?

ப; பௌத்த விஹாரையில் நடந்தது போல இனியும் நடக்கக்கூடாது, மக்கள் அச்சம் பயமின்றி வாழவேண்டும் ,இராணுவத்தினருக்கே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் பொதுமக்களுக்கு எவ்வாறு நடக்கும். ஊர்சுற்றுபவர்கள் மற்றும் பிஸ்டலுடன் இருப்பவர்களுக்கு நாட்டின் சட்டத்தை கையிலெடுக்க விடக்கூடாது.

கே; இராணுவ அதிகாரியான நீங்கள் எவ்வாறு சட்டத்தை அமுல்படுத்தப் போகின்றீர்கள்?

ப; இராணுவச்சட்டம் வேறு மக்கள் மத்தியில் அமுல்படுத்தவேண்டிய சட்டம் வேறு. இராணுவச்சட்டத்தின் கீழிருந்த நான் தற்போது பொதுமக்களின் சட்டத்தின் கீழ் வந்துள்ளேன். பொதுமக்களுக்கான சட்டமே முன்னெடுக்கப்படும்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: