உழைப்பே உயர்வு என்ற ஒரு வரியை வைத்துக் கொண்டு பட்டுப்பூச்சி நு£ல் பின்னிய மாதிரி அழகாக கதை பின்னியிருக்கிறார் புதுமுக இயக்குனர் ராம்நாத். கசாப்பு கடைக்குள் சிக்கிக் கொண்டு ரத்தம் பார்க்கும் சினிமாக்களுக்கு மத்தியில் ராம்நாத்தின் இந்த படைப்பு சாயங்காலத்து மெரீனா!
அம்பாசமுத்திரத்திலிருந்து அநாதையாக சென்னைக்கு வரும் கருணாஸ் இங்கே பேப்பர் போட்டு ‘பொழப்பை’ தொடங்குகிறார். அவரது ஒரே லட்சியம் அம்பானியாவதுதான். வந்த இடத்தில் காதல், கல்யாணம் என்று கதை நகர்ந்தாலும் பூ கட்டுகிற விரல்களுக்கு நு£ல் முக்கியம் என்பதை காட்சிக்கு காட்சி விளக்குகிறார் ராம்நாத். கடைசியில் ‘அம்பானியாகணும்னு நினைச்சாதான் அட்லீஸ்ட் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு ஓனராகவாவது ஆக முடியும்’ என்று கூறி வணக்கம் போடுகிறார்கள். இடையில் வருகிற சீன்கள் ஒவ்வொன்றும் கலகலப்பான கதம்பாயணம்.
கருணாசுக்கு ‘கால்படி’ சைசில் ஒரு சிஷ்யன். சிக்னலில் பிச்சையெடுத்தவனை உறவாக நினைத்து கூடவே வைத்துக் கொள்கிறார். வாடகைக்கு இவர் தங்கியிருக்கிற போர்ஷனில் நவ்னீத் கவுரும் தங்கியிருக்க ஆரம்பிக்கிறது காதல் எபிசோட்! ஐபிஎஸ் ஆக்கியே தீருவேன் என்று நசநசக்கும் அப்பாவிடமிருந்து அற்புதமான ஒரு ஐடியா சொல்லி விடுதலை வாங்கிக் கொடுக்கும் கருணாஸ் மீது காதல் பற்றிக் கொள்கிறது நவ்னீத்துக்கு. ஆனால் கருணாசுக்கோ இந்த பொல்லாத காதல் வந்து தனது அம்பானி கனவில் கல்லை போட்டுவிடுமோ என்ற அச்சம். விலகி விலகி போகிறவரை விரட்டி விரட்டி கை பிடிக்கிறார் நவ்னீத். இதற்கிடையில் கோட்டா சீனிவாசராவ் -கருணாசின் கொடுக்கல் வாங்கல்தான் விறுவிறுப்பான இன்னொரு பகுதி. அவ்வளவும் போச்சே என்று ரசிகர்களையும் திண்டாட வைத்து படத்தை சுபமாக்குகிறார் டைரக்டர்.
‘பட்டைகேற்ற பளீர், சட்டைக்கேற்ற சவுக்காரம்’ என்று கருணாசின் என்ட்ரியே கலகலப்பாக்குகிறது தியேட்டரை. அதிகாலை நாலு மணிக்கு எழுந்து ஒற்றைகாலில் “நான் அம்பானியாகணும் நான் அம்பானியாகணும்” என்று உரக்க குரல் கொடுத்தபடி இவர் தவம் இருக்க, அடுத்தடுத்த நாட்களில் அத்தனை போர்ஷன்களிலும் ஆளாளுக்கு தவம் இருக்கும் காட்சிகளில் தெறித்து சிரிக்கிறது தியேட்டர். காதல் காட்சிகளில் இன்னும் சுவாரஸ்யம். கீழே ஏணியை பிடித்துக் கொண்டு கருணாஸ். அரையும் குறையுமாக அதில் இறங்கி வரும் நவ்னீத். கண்ணை மூடக் கூடாது. வேறு பக்கம் பார்க்கக் கூடாது என்று கண்டிஷனும் போடுகிறாரா, பூச்சி பறக்குது கண்களில்! ஒரு கட்டத்தில் அப்படியே சென்ட்டிமென்டுக்கு தாவுகிறார் கருணாஸ். எங்கே ஏமாந்து விடுவாரோ என்ற படப்படப்பு வருகிறது நமக்கு.
வெறும் கவர்ச்சி மட்டுமல்ல, நடிப்பிலும் பின்னி எடுக்கிறார் நவ்னீத் கபூர். இவரை காதலிக்கிற இன்னொரு இளைஞர் (?) லிவிங்ஸ்டன். ஏய் என்னை லவ் பண்றியே, உன் வயசென்ன சொல்லு என்று நவ்னீத் ஆவேசப்படும்போது பின்னணியில் பெரியார் அண்ணா கிளிப்ங்சை போட்டு தியேட்டரையே திடுதிடுக்க வைக்கிறார்கள். லிவிங்ஸ்டனை காட்டி ‘இந்த பையன் முகத்தை பாரும்மா’ என்று கருணாஸ் கெஞ்சுகிற போது இன்னும் ரணகளமாகிறது ஏரியா. ரீசார்ஜ் செய்யும்போது ஒரு நம்பரை தவறாக போட்டுவிட்டு அந்த பணத்தை ஒவ்வொரு முறையும் நேரில் வந்து போன் பேசிக்கழிக்கும் மயில்சாமியும் கலகலக்க வைக்கிறார். முகம் காட்டாத அந்த புரபசர், வீட்டு மாடியிலிருந்து பொசுக்கென்று ஒவ்வொரு முறையும் கீழே குதித்துவிட்டு போகிற காட்சிகளும் களேபரம்.
படத்தில் எதிர்பாராத திடுக் திருப்பம் கருணாசின் சிஷ்யன் செய்கிற வழிப்பறிதான். போலீஸ் ஸ்டேஷனில் ‘உனக்கும் பணத்தேவை இருக்குன்னு தெரியாம போச்சுரா. இந்தா வச்சுக்கோ’ என்று இரண்டு லட்சத்தை வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் நடக்கும் கருணாசும், என்னை மன்னிச்சுரு என்று அலறும் சிறுவனும் கலங்கடிக்கிறார்கள். கோட்டா சீனிவாசராவ், அவரது மகனாக நடித்திருக்கும் சேரன் ராஜ் ஆகியோரும் மனதில் கோலமிடுகிறார்கள்.
இசை கருணாஸ். எல்லா டைப்பிலும் ஒரு பாடல் என்று கூட்டாஞ் சோறாக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் புலித்தேவனின் கைங்கர்யமும் பலே.
கலவை ஜோராக இருக்கிறது. ஜன சமுத்திரத்தில் அம்பானியானால் கூட ஆச்சர்யமில்லை!
Rating- 2/5
மறுமொழியொன்றை இடுங்கள்