தகாத உறவு-மலேசியாவில் 3 பெண்களுக்கு கசையடி

மலேசியாவில் திருமணமான பின்னர் தகாத உறவு கொண்ட மூன்று பெண்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி கசையடி வழங்கப்பட்டது. மலேசியாவில் இஸ்லாமிய சட்டப்படி பெண்கள் கசையடி வாங்கிய முதல் சம்பவம் இதுவே. ஏற்கனவே ஹோட்டல் பாரில் பீர் குடித்த குற்றத்துக்காக கசையடி தண்டனை அறிவிக்கப்பட்ட 32 வயது கார்த்திகா என்ற பெண்ணுக்கு இன்னும் தண்டனை வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், தகாத செக்ஸ் உறவு கொண்ட குற்றத்துக்காக மூன்று பெண்கள் மற்றும் நான்கு ஆண்களுக்கு கசையடி வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹூசைன் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த கசையடி தண்டனை கடந்த 9ம் தேதியே வழங்கப்பட்டு விட்டது. இத்தனை நாள் நிதானித்து நேற்று இதனை அரசு அறிவித்துள்ளது. திருமணமான மூன்று பெண்கள் முறை தவறி மற்ற வேற்று ஆண்களுடன் செக்ஸ் உறவு கொண்டதால் அந்த பெண்களுக்கும், அவர்களுடன் தொடர்புடைய நான்கு ஆண்களுக்கும் இந்த தண்டனையை கோலாலம்பூரில் உள்ள ஷரியா கோர்ட் விதித்து தீர்ப்பளித்ததாக அமைச்சர் கூறினார். தண்டனை பெற்ற பெண்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க அமைச்சர் மறுத்து விட்டார். ஆண்களும், பெண்களும் தனித்தனியாக சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டு கசையடி கொடுக்கப்பட்டதாகவும், அப்போது மருத்துவர் ஒருவர் உடன் இருந்தார் என்றும் அமைச்சர் கூறினார். பெண்களுக்கு நான்கு கசையடியும், ஆண்களுக்கு ஆறு கசையடியும் தரப்பட்டதாகக் கூறிய அமைச்சர், இந்த தண்டனையால் அவர்களை காயப்படுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல. இதைப்பார்க்கும் மற்ற பெண்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடக் கூடாது என்பதற்காகவே இந்த தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்றார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »